சர்வதேசத்தை நம்பி ஏமாந்து போகாதீர்! – சம்பந்தனுக்கு மிரட்டலுடன் அரசு அறிவுரை

“சர்வதேசம் ஒருபோதும் இலங்கைத் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கமாட்டாது. சர்வதேசத்தை நம்பி ஏமாந்துபோக வேண்டாம் என்று சம்பந்தனிடம் நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.”

– இவ்வாறு ராஜபக்ச அரசின் பேச்சாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

‘சமஷ்டியைக் கேட்கும் உரித்து எமக்கு உண்டு. தமிழ் மக்கள் அநாதைகளாக்கப்படவில்லை. அவர்களின் பின்னால் சர்வதேசம் நிற்கின்றது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சமஷ்டி முறைமையிலான தீர்வை ஒருபோதும் தமிழர்களுக்கு அரசு வழங்காது. புதிய நாடாளுமன்றத்தில் மூவின மக்களுக்கும் உரித்தான பொதுவான தீர்வையே அரசு வழங்கும். இந்த நிலைப்பாட்டிலிருந்து நாம் சற்றேனும் பின்நகரமாட்டோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத விடயங்களையே வலியுறுத்தியுள்ளது. அதனாலேயே அந்த விஞ்ஞாபனத்தை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம்.

சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் தத்தமது நலனில் அக்கறைகொண்டுதான் செயற்படுகின்றன. எனவே, சர்வதேசம் ஒருபோதும் இலங்கைத் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கமாட்டாது. சர்வதேசத்தை நம்பி ஏமாந்துபோக வேண்டாம் என்று சம்பந்தனிடம் நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

அதேவேளை, சம்பந்தன் இலங்கையில் இருந்துகொண்டுதான் இப்படியெல்லாம் வீரவசனம் பேசுகின்றார். அவர் சர்வதேசத்தில் இருந்துகொண்டு வீரவசனம் பேசவில்லை என்பதை அவரே கவனத்தில்கொள்ள வேண்டும்.

தேர்தல் காலம் என்றபடியால் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் அநாதைகள் என்று கூறவும் மாட்டோம்; அப்படி நினைக்கவும் மாட்டோம். தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் இலங்கைத் தாயின் பிள்ளைகள் என்றே அரசு நினைத்துச் செயற்படுகின்றது. ஆனால், தமிழர்களின் அரசியல் தலைமைகள்தான் அவர்களைத் தனிவழியில் செல்லத் தூண்டுகின்றன. இதைத் தமிழ் மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.

Comments are closed.