கடற்படை, பொலிஸ் கூட்டு சோதனையில் வெடிபொருட்களுடன் ஒருவர் சிக்கினார்!
திருகோணமலை மாவட்டம், நிலாவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடற்படையினரும், நிலாவெளி பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஓட்டோவில் வோட்டர் ஜெல் எனப்படும் 27 வெடிபொருட்களையும், 500 டெட்டனேட்டர்களையும் கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், குறித்த ஓட்டோவைச் சோதனையிட்டபோது வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நிலாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான சந்தேகநபருடன், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக நிலாவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கடற்படையின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.