கோட்டா அரசுக்கு சு.க. முழுமையான ஒத்துழைப்பு! – மைத்திரி உறுதி.
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் அதேவேளை பண்டாரநாயக்கவின் கொள்கைகளையும் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிப் பயணிப்போம்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரும் இலங்கையின் 4ஆவது பிரதம அமைச்சரான எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 62 ஆவது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
ஹொரகொல்லவிலுள்ள பண்டாரநாயக்கவின் நினைவிடத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலரஞ்சலி செலுத்தினர். சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மைத்திரிபால சிறிசேன கூறியதாவது:-
“தற்போதைய அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிச் செயற்பட்டு வருகின்றோம். பண்டாரநாயக்கவின் வழியில் அவரின் கொள்கைகளைப் பின்பற்றிப் பயணிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உரிய கௌரவமாக அமையும். எனவே, அவரின் வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் என்பது இந்த நாட்டின் எதிர்காலமாகும்” – என்றார்.