பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சென்னை கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது அசோக்நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை கேகே நகரில் அமைந்துள்ள பத்ம சோஷத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் பணியாற்றும் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. மாணவிகளிடம் அநாகரிகமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப்பில் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் மாணவிகள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இதையடுத்து ராஜகோபாலனை போலீசார் கைது செய்தனர். குண்டர் சட்டத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் உஷாராகி, தன்னுடைய செல்போனில் உள்ள ஏராளமான மாணவிகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் அவர்களுடன் பேசிய அந்தரங்க சேட் ஆகியவற்றை ராஜகோபாலன் டெலிட் செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், ராஜகோபாலன் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஏழு பேர் அளித்த புகாரின் அடிப்படையில் வாக்குமூலம் பெறப்பட்டு அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.