பல்தரப்புத் துறைகளிலான இலங்கை – சவூதி அரேபிய ஒத்துழைப்பு.
கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் அல் ஹர்தியை வெளிநாட்டு அமைச்சில் 2021 அக்டோபர் 01ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வரவேற்றார்.
வெளிநாட்டு அமைச்சர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, இரு நாடுகளுக்கிடையேயான சிறந்த, நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்ததுடன், முஸ்லிம்களின் புனித நகரமான சவுதி அரேபியாவின் ஹஜ் வருடாந்த இஸ்லாமிய யாத்திரையின் போது இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு சவுதி அரேபிய அரசாங்கம் வழங்கிய மரியாதை மற்றும் புனித ரமழான் மாதத்தில் இலங்கைக்கு வழங்கப்படும் வருடாந்த பேரீச்சம்பழ நன்கொடை ஆகியவற்றை நன்றியுடன் ஒப்புக்கொண்டார்.
பல சர்வதேச அரங்குகளில் சவுதி அரேபியாவின் புரிந்துணர்வு மற்றும் ஆதரவுக்கு அமைச்சர் பீரிஸ் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இந்த ஆதரவு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் சீரானதாக அமைந்திருந்ததுடன், ஒரு கொள்கை நிலையில் நிறுவப்பட்டது. இந்தக் கொள்கை ரீதியான நிலைப்பாடு இலங்கையால் பகிரப்பட்ட மூன்று ஆழமான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. முதலாவதாக, ஒவ்வொரு தேசிய அரசினதும் தனித்துவமான அடையாளமும் கண்ணியமும் அதன் கலாச்சாரமும் மதிக்கப்படல் வேண்டும். இரண்டாவதாக, தேசிய நிறுவனங்கள் மற்றும் கட்டமைப்புக்கள் அதன் ஆணைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான முழுமையான இடம் கொடுக்கப்படல் வேண்டும். இறுதியாக, அந்த அரசுகளின் உள்ளக விவகாரங்களில் தேவையற்ற தலையீடு அல்லது குறுக்கீட்டை நியாயப்படுத்தும் கருவியாக மனித உரிமைகள் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது.
இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சவுதி அரேபியா உதவியமையைப் பாராட்டிய அமைச்சர், இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் இரு நாடுகளினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவியுள்ளதாக வலியுறுத்தினார். திறமையான மற்றும் தொழில்முறைப் பிரிவுகளில் இலங்கையர்களுக்கு அதிகமான வாய்ப்புக்களை வழங்குமாறு அவர் சவுதி அரேபியாவை ஊக்குவித்தார். கோவிட்-19 தொற்றுநோயின் ஆரம்பக் கட்டங்களில் இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்ப உதவிய சவுதி அரேபிய அரசாங்கத்துக்கு அவர் நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சவுதி நிதியத்தின் பங்களிப்பையும் அமைச்சர் நன்றியுடன் குறிப்பிட்டார்.
இலங்கையுடனான இருதரப்புக் கூட்டாண்மைக்கு சவுதி அரேபியா தொடர்ந்தும் முக்கியத்துவமளித்து வருவதாகவும், கோவிட்-19 நிலைமை சீரானவுடன் இலங்கையால் அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைப் பகுதிகளில் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதாகவும் அமைச்சருக்கு தூதுவர் உறுதியளித்தார்.
பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.