“மண்டல -மகரவிளக்கு” யாத்திரை காலத்தில் ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கேரள அரசு முக்கிய அறிவிப்பு
சபரிமலையின் பிரசித்தி பெற்ற “மண்டல -மகரவிளக்கு” யாத்திரை காலத்தில் ஐயப்பன் கோவிலுக்கு தினமும் 25,000 பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கேரளா அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரையும், டிசம்பர் 30 முதல் ஜனவரி 18 வரை ஆகிய நாட்களில் கோவில் திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த முறை 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் அனுமதி உண்டு. இரண்டு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்குபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கேரளா தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. தரிசனத்திற்குப் பிறகு மக்கள் சன்னிதானத்தில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நிலக்கல் வரை மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும், அங்கிருந்து பக்தர்கள் KSRTC பஸ்களில் மட்டுமே பம்பை வரை செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எருமேலி வழியாக நடந்து செல்ல பக்தர்களுக்கு இம்முறை அனுமதி இல்லை எனவும் கேரளா அரசு அறிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள், நிலக்கல் பகுதிக்கு நேரடியாக சென்று பதிவு செய்துகொள்ளும் வகையில் சிறப்பு வசதிகளும் செய்யப்படும் என சபரிமலை நிர்வாகம் அறிவித்துள்ளது.