யாழ். இணுவில் கொள்ளை: மேலும் மூவர் கைது!
யாழ். இணுவிலில் நள்ளிரவில் வீடு புகுந்து கைக்கோடாரிகளைக் காண்பித்து அச்சுறுத்தில் 21 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி இணுவிலில் உள்ள வீடொன்றுக்குள் நள்ளிரவு புகுந்த மூவர் கைக்கோடாரிகளைக் காண்பித்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தில் 21 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையில் மறுநாள் 4ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டது. அது தொடர்பில் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அந்நிலையில், சந்தேகநபர் ஒருவர் தனது சட்டத்தரணி ஊடாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று (07) பகல் சரணடைந்தார். தன்னிடமிருந்த 13 தங்கப் பவுண் நகைகளைப் பொலிஸாரிடம் அவர் ஒப்படைத்திருந்தார்.
குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரிடமிருந்தும் 2 கைக்கோடாரிகள் மற்றும் 6 பவுண் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
அதேவேளை, சந்தேகநபர்கள் மூவருக்கு உதவியளித்து கொள்ளைச் சம்பவத்துக்கு உடந்தையாகவிருந்த ஒருவரும் இன்று (08) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரும் அவர்களுக்கு உதவியதாக ஒருவர் என நால்வரைப் பொலிஸார் தடுப்புக்காவலில் வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.