தனிநபர் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பழைய வாகனங்களை அழிப்பவர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு

தனிநபர் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பழைய வாகனங்களை அழிப்பவர்களுக்கான சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல், பழைய வாகனங்களை வைத்திருப்பதால் கட்ட வேண்டிய கூடுதல் தொகை தொடர்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு முயன்று வருகிறது. பழைய வாகனங்கள் அதிகளவில் மாசுவை வெளிப்படுத்துவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்ட அரசு, வாகனங்களை அகற்றுவதற்கான கொள்கையை (Vehicle Scrappage Policy )வெளியிட்டது. இந்த திட்டம் தொடர்பான சில அறிவிப்புகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பழைய வாகனங்களை அழிப்பதற்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 15 ஆண்டுகளை கடந்த போக்குவரத்து வாகனங்களையும் 20 ஆண்டுகளை கடந்த தனிநபர் வாகனங்களையும் அழித்துவிட்டு புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு சாலை வரியில் 25 சதவீதம் வரை சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுகள் 15 ஆண்டுகளை கடந்த தங்களது போக்குவரத்து வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை புதுப்பிக்க வழக்கமான கட்டணத்தை விட 8 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இருசக்கர வாகனங்களுக்கான பதிவு கட்டணம் ரூ.300 ஆகும். இதுவே 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமையான இருசக்கர வாகங்களை பதிவு செய்ய வேண்டும் என்றால் ரூ.1000 வரை அவர்கள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

இதேபோல் கார்களை பதிவு செய்ய கட்டணம் ரூ.600 ஆகும். இதுவே 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமையான கார் என்றால் பதிவு கட்டணம் ரூ.5000 செலுத்த வேண்டிவரும். மேலும் 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களுக்கு தரப் பரிசோதனை செய்வது கட்டாயம் ஆகும். இதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

 

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் 17 லட்சம் பழைய நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் செல்லுபடியாகும் சான்றிதழ் இல்லாமல் உள்ளன. மேலும், 20 ஆண்டுகளுக்கும் மேலான இலகு ரக மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 51 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.