மழை வேண்டி மழைக் கஞ்சி வழிபாடு நடத்திய கிராம மக்கள்!
விளாத்திகுளம் அருகே மழை வேண்டி மழைக் கஞ்சி வழிபாடு நடத்திய கிராம மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கந்தசாமிபுரத்தில் மழை வேண்டி அக்கிராம மக்கள் மழைக்கஞ்சி வழிபாடு நடத்தினர். மழை பொய்த்து விட்டால் மழை வேண்டி ஒவ்வொரு வீடு வீடாக சென்று உணவுகளை சேகரித்து ஒரு இடத்தில் வைத்து வழிபாடு நடத்தி பொது மக்களுக்கு மழைக்கஞ்சி வழங்குவது தமிழக கிராமங்களில் உள்ள பழக்கவழக்கம்.
இவ்வாறு வழிபாடு நடத்தினால் மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கந்தசாமிபுரத்தில் அக்கிராம மக்கள் மழைக்கஞ்சி வழிபாடு நடத்தியுள்ளனர். பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இப்பகுதியில் விவசாயிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விதைப்பு பணிகளை தொடங்கினர். ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்த மாதிரி மழை பெய்யவில்லை. இதனால் பயிர்கள் கருகும் நிலை உள்ளதால் மழை வேண்டி கிராம மக்கள் மழைக்கஞ்சி வழிபாடு மேற்கொண்டனர்.
கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வேடமிட்டு, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று உணவுகளை சேகரித்து, அங்குள்ள காளியம்மன் கோவிலில் வைத்து அனைவரும் ஒன்று சேர்ந்து வழிபாடு நடத்தினர்.
பின்னர் அந்த உணவுகளை பிரித்து மக்களுக்கு வழங்கினர். அனைவரும் ஒன்று சேர்ந்து உணவருந்தினர்.தொடர்ந்து 3 நாள்கள் மழைக்கஞ்சி வழிபாடு நடத்தி உள்ளதால் நிச்சயமாக மழை பெய்யும், தங்களது பயிர்கள் கருகுவதில் இருந்து காப்பற்றப்படும் என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.