ராஜபக்ச அரசு உடன் பதவி விலக வேண்டும்! சஜித் அழுத்தம்.
“நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விருப்பத்துக்கு ஏற்ப அதிகரித்துச் செல்கின்றன. விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாத அரசு எதற்கு? நாட்டைக் கொண்டுசெல்லும் திறன் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு ராஜபக்சக்கள் தலைமையிலான அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
‘எதிர்க்கட்சியின் மூச்சு” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மருத்துவமனை உபகரணங்களை தந்திரிமலை பிரதேச மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டைக் கட்டியெழுப்புவது மாத்திரமன்றி, நாட்டின் பொருளாதாரத்தைக்கூட முகாமைத்துவம் செய்துகொள்ள முடியாததை இந்த அரசு நிரூபித்துக் காட்டியுள்ளது.
நாட்டைக் கொண்டு செல்லும் திறன் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு இந்த அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய குழுவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விருப்பத்துக்கு ஏற்ப அதிகரித்துச் செல்லும்போது, அதனைக் கட்டுப்படுத்த முடியாது எனச் சொல்லுவதாயின், அரசு எதற்கு எனக் கேட்கின்றேன்.
இந்த நேரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சனைகளில் இருந்து மக்களை மீட்டு, அவர்களின் அன்றாட வாழ்க்கையை சுமுகமாகப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான திறன் அரசிடம் இல்லையென்றால், அதை ஏற்றுக்கொண்டு உடனடியாகப் பதவி விலக வேண்டும்” – என்றார்.