இந்திய அணியுடன் இணையும் ஆவேஷ் கான், வெங்கடேஷ் அய்யர், சஞ்சு சாம்சன்.
ஐபிஎல் 2021 தொடருக்குப் பின் டெல்லி கேப்பிடல்ஸ் ஆடும் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் இந்திய டி20 உலகக்கோப்பை அணியுடன் இணைகிறார்.
அதே போல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிவேக பவுலர் உம்ரன் மாலிக், மணிக்கு 153 கிமீ வேகம் வீசியதால் இந்திய அணிக்கான டி20 உலகக்கோப்பை நெட் பவுலராக தொடர்கிறார். கொல்கத்தாவுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் மணிக்கு 151.03 கிமீ வேகம் வீசிய உம்ரன் மாலிக் பிறகு ஆர்சிபிக்கு எதிராக 153 கிமீ வேகம் வீசி மூக்கில் மேல் விரல் வைக்கச் செய்தார். இதையடுத்து நெட்பவுலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார், வாய்ப்புக் கிடைத்தால் உலகக்கோப்பை டி20-யில் அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இப்போது ஆவேஷ் கானும் இந்திய அணியுடன் இணைகிறார். ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் இதுவரை 23 விக்கெட்டுகளை ஆவேஷ் கான் கைப்பற்றியுள்ளார்,
இவரைச் சேர்த்தது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் கூறும்போது, “ஆவேஷ் கான் சராசரியாக மணிக்கு 142 முதல் 145 கிமீ வேகம் வீசுகிறார். தட்டையான ஆட்டக்களங்களிலேயே பந்தை குத்தி எகிறச் செய்கிறார். இவரை நெர்பவுலராகச் சேர்ப்பதன் மூலம் இன்னும் மேம்பட முடியும் என்று கருதுகிறோம்” என்று கூறியுள்ளது.
அதே போல் மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் என்று கருதப்படும் ஹர்திக் பாண்டியா பந்து வீசவே இல்லை, இதனால் உலகக்கோப்பையில் இவரது இடமே சிக்கலாகியுள்ளது, இவருக்கு மாற்று பவுலரைத் தேர்வு செய்ய வேண்டும், அக்டோபர் 15க்குள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதனையடுத்து கொல்கத்தா அணியின் புதிய கண்டுப்பிடிப்பான அதிரடி தொடக்க வீரரும் டீசண்டான பவுலருமான வெங்கடேஷ் அய்யர் மாற்று வீரராக அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனையும் தொடர்ந்து எமிரேட்சில் தங்கியிருக்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.