கொரோனாவால் உயிரிழந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் – கேரள அரசு ஒப்புதல்!
கொரோனா தொற்றால் உயிரிழந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.5000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்க கேரளா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில்தான் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. தொடக்கத்தில் கொரோனாவை சிறப்பாக கையாண்ட கேரளா, அதன் பின்னர் சறுக்கியது. இதனால்,கேரளாவில் தொற்றின் பாதிப்பு மற்றும் இறப்பு ஆகியவை அதிகரித்தது. மாநிலத்தில் இதுவரை 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு கேரள அரசு திட்டமிட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குடும்பத்துக்கு உதவ அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக, முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனாவால் உயிரிழந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும். அரசின் சமூக நலத்திட்டம், நலத்திட்ட நிதி மற்றும் பிற ஓய்வூதியங்களை பெற்றாலும் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெற முடியும். கேரளாவில் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த நபர் கேரளாவிலோ அல்லது பிற மாநிலங்களிலேயோ அல்லது வெளிநாட்டிலேயே உயிரிழந்திருந்தாலும் அவரது குடும்பத்தினர் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொரோனாவால் உயிரிழந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் என மூன்று ஆண்டுகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் .