இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு இங்கிலாந்து உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கிகாரம் !
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு இங்கிலாந்து உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கிகாரம் வழங்கியுள்ளன.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒருசில நாடுகள் தடுப்பூசி சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே தங்கள் நாட்டுக்குள் வர அனுமதி அளிக்கின்றன. இந்தியாவின் கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகளை பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்காமல் இருந்தன.
இதனால் இந்தியர்கள் அந்த நாடுகளுக்கு செல்ல முடியாத் நிலை ஏற்பட்டது. கல்வி, வேலை, சுற்றுலா போன்றவற்றிற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த இந்தியர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தொடர்பாக பிற நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தனை நடத்தியது.
இதை தொடர்ந்து இந்தியாவின் தடுப்பூசியை பல்வேறு நாடுகளும் அங்கீகரிக்க தொடங்கியுள்ளன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நேபாளம், பெலாரஸ், லெபனான், அர்மேனியா, உக்ரைன், பெல்ஜியம், ஹங்கேரி, செர்பியா போன்ற நாடுகள் இந்தியாவின் கொரோனா சான்றிதழை அங்கீகரித்துள்ளன. ஹங்கேரி மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளன என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கோவிஷீல்டு அல்லது பிரிட்டன் அங்கீகரித்த தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டவர்களுக்கு அக்டோபர் 11ம் தேதி முதல் தனிமைப்படுத்துதல் கிடையாது என்றும் பிரிட்டன் கூறியுள்ளது.
இருப்பினும், தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சீனா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில நாடுகள் இந்தியாவில் இருந்து பயணிகள் வரும்போது கட்டாய கோவிட் -19 நெறிமுறைகளுக்கு மேலதிகமாக, கூடுதல் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளன.