இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுக்கவேண்டும் சர்வதேசம் – சம்பந்தன் வலியுறுத்து
“அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகம் இலங்கைக்குக் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.
“தீர்வுத் திட்டப்பாதையை வலுவாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
திருகோணமலையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இன்று எமது முயற்சியின் காரணமாக நாங்கள் அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள அரசியல்வாதிகளையும் முக்கிய இராஜதந்திரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியதன் காரணமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கை அரசு அந்தத் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு, அதனை அமுல்படுத்துவதாக உறுதியளித்தது. ஆனால், அதனை இதுவரையும் நிறைவேற்றவில்லை.
இந்தச் சூழ்நிலையில் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சர்வதேசம், இலங்கை அரசுக்குக் கூடிய அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும்.
எமது மக்கள் ஓரணியாகத் திரண்டு தமது ஆணையை எமக்குத் தர வேண்டும். ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துவதற்கு – ஐ.நா. தீர்மானங்களை இலங்கை நிறைவேற்றுவதை இனியும் தாமதப்படுத்தாமல் இருப்பதற்கு நாங்கள் பெரும் பலமான அணியாக நாடாளுமன்றம் செல்ல வேண்டும்” – என்றார்.
Comments are closed.