மன்மோகன் சிங்குக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது – நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தகவல்
உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவருடைய உடல்நிலை முன்னேற்றம் கண்டுவருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
கடந்த ஏப்ரலில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மன்மோகன் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தாா். இந்நிலையில், அவருக்கு கடந்த திங்கள்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட அவருக்கு உடல் சோா்வு ஏற்பட்டதைத் தொடா்ந்து, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
ஏற்கெனவே அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அது தொடா்பான பரிசோதனையும் மருத்துவா்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:
மன்மோகன் சிங்குக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் ரத்த தட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றாா் அவா்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய-நரம்பியல் சிகிச்சைக்கான தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவா் நிதீஷ் நாயக் தலைமையிலான மருத்துவ நிபுணா் குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.
முன்னதாக, மன்மோகன் சிங்கை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த வியாழக்கிழமை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தாா்.