சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்ட சித்து- பஞ்சாப் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு

பஞ்சாப்பின் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவிவந்தது. அந்த மோதல்போக்கு உச்சமடைந்த நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அம்ரீந்தர் சிங். கட்சியில் அவமானப்படுத்தப்பட்டேன். காங்கிரஸில் இருக்கமாட்டேன் என்று அறிவித்தார் அம்ரீந்தர். அதனைத் தொடர்ந்து, சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமனம் செய்யப்பட்டார். அவருடனும் மோதல் போக்கை கடைபிடித்தார் நவ்ஜோத் சிங் சித்து. பஞ்சாப் மாநில தலைவர் பதவியிலிருந்து விலகினார் சித்து. அதனையடுத்து, ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெற்றார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து எழுதியுள்ள கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டார். அந்த கடிதத்தில், ‘விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிக்கையில் இடம்பெற உள்ள 13 அம்சங்கள் குறித்து நேரில் ஆலோசனை நடத்த வேண்டும். இதற்காக நேரம் ஒதுக்க வேண்டும். பஞ்சாபில் மீண்டெழுவதற்கான கடைசி வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் நாட்டின் பணக்கார மாநிலமாக திகழ்ந்த பஞ்சாப், தற்போது அதிக கடன் சுமை கொண்டதாக மாறியுள்ளது. தற்போது, ஒரு லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு தேவையான அளவு நிதிநிலை இல்லை.

குருகிராந்த் சாகிப் கொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளிகளுக்கும் மற்றும் , பெபல் கலன் மற்றும் கோட்காபூர் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்களுக்கும் தண்டனை வழங்கி, பஞ்சாபின் ஆன்மாவிற்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். போதை மருந்து கடத்தலில் முக்கிய குற்றவாளியை கைது செய்ய வேண்டும். மதத்தை அவமதித்த விவகாரம், போதைப்பொருள் விவகாரம், வேளாண் பிரச்னைகள், வேலைவாய்ப்பு, மணல் கொள்ளை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்கள், மின்சாரம், போக்குவரத்து நெருக்கடி, குறைந்த விலையில் மின்சாரம் ஆகியவை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரங்கள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய கடிதம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.