கேரளாவில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை தொடர்ந்து, கடந்த சில தினங்களாக கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு, இடுக்கி உள்பட பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று முன்தினம் முதல் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய மழை பெய்தது.

இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. தொடர்ந்து, வருகின்ற 19-ம் தேதி வரை கோட்டயம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் உட்பட 7 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இடைவிடாது பெய்த மழையால் கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த பல வீடுகள் இடிந்து விழுந்து மண்ணில் புதைந்தன. வீட்டில் இருந்த அனைவரும் மண்ணில் புதைந்தனர். இதைத்தொடர்ந்து, அங்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், இதுவரை 21 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து, மீட்பு பணிகளில் ராணுவம் மற்றும் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.