வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி பரிதாபச் சாவு!
புத்தளம் – அனுராதபுரம் வீதி, அளுத்கம 18ஆம் மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து பணியாற்றி வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.
சாலியவௌ, பளுகஸ்ஸேகம பிரதேசத்தை சேர்ந்த ஆர்.எம்.சமன் அருணப்பிரிய என்ற 51 வயது பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவர் கடமை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கப் ரக வாகனம் ஒன்று இவர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளானது பின்னால் வந்த லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தையடுத்து லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளார். அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் கப் ரக வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.