பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து நிதி அமைச்சகத்துடன் மத்திய அரசு தொடர் ஆலோசனை!!
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டது. இரு எரிபொருளிலும் லிட்டருக்கு 35 பைசா உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. விமானங்களுக்குப் பயன்படும் எரிபொருள் விலையைவிட வாகனங்களுக்குப் பயன்படுத்தும் எரிபொருள் விலை 30 சதவீதம் உயர்ந்துவிட்டது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.84 ஆகவும், மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.111.77 ஆகவும் உயர்ந்துள்ளது. மும்பையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.102.52 ஆகவும், டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.57 ஆகவும் அதிகரித்துள்ளது.
நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-க்கு மேல் உள்ளது. 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி உச்சத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து நிதி அமைச்சகத்துடன் மத்திய அரசு தொடர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய, மாநில அரசுகள் இரண்டும் சேர்ந்து எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்றும், சவுதி அரேபியாவிலிருந்து ரஷ்யா வரை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை அணுகி விலையை குறைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. அடுத்த மூன்று மாதங்களுக்கு உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70 டாலருக்குள் இருக்கும் படி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர்.
அதேபோல், பெட்ரோலியப் பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டுவருவதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பது அண்மையில் தெரியவந்தது. இதனால், நாட்டின் மூலோபாய எண்ணெய் இருப்புக்கள் 90 நாட்களுக்கு சற்று குறைவாக இருப்பதாகவும், அதனால் அவசரநிலைக்காக மட்டும் ஆலோசிக்கபடலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா ,எரிபொருள் விலை உயர்வு குறித்து கூறிய கருத்து குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “எரிபொருள் விலையை 2014ம் ஆண்டுடன் ஒப்பிட முடியாது” என்றனர்.
இதுதொடர்பாக சின்ஹா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நாம் உயிரிழந்த மக்களை கொண்ட நாடாக உள்ளோம். பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை தினசரி நியாயமற்ற முறையில் உயர்ந்து வருவதை வேறு எந்த நாட்டிலும் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். 2014ம் ஆண்டில் ரூ.75,000 கோடி வரி வசூலித்து வந்த மத்திய அரசு, இன்று ரூ.3.50 லட்சம் கோடியாக வசூலித்து வருகிறது. இது பகல் கொள்ளை இல்லையா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.