அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான அறிவிப்பு!
அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் வரும் 21ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டும் எனவும் இது யாருக் கும் எதிரான செயற்பாடு அல்ல எனவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா. புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. ஒரு சில அதிபர், ஆசிரிய தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் உள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. ஆனால் பிரத்தியேகமாக பல ஆசிரியர்கள் பணம் பெற்று கற்பித்தலில் ஈடுபட்டுள்ளனர்.
முதலில் போராட்டம் தொடங்கியது சம்பள உயர்ச்சிக்காக அல்ல. கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு எதிராக தனி ஒரு மனிதனாக ஒரு ஆசிரிய தொழிற் சங்கத்தின் செயலாளர் தொடக்கிய போராட்டம். இவ்விடயம் தொடர்பில் அவரது சங்கத்தினருக்கே அது தெரியாது.
அவரை தனிமைப் படுத்தலுக்கு கொண்டு சென்று விடுவிக்கப்பட்ட பின்னரே சம்பள முரண்பாடு தொடர்பான விடயம் பேசப்பட்டது. இந்த விடயங்கள் தொடர்பாக எவரும் எம்முடன் பேசவும் இல்லை. கலந்துரையாடவும் இல்லை.
நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கும் போது இலங்கையில் உள்ள அனைத்துச் சங்கங்களுடனும் பேச வேண்டும். 2 அரசியல் கட்சி சார்ந்த சங்கங்கள் தமது அரசியல் நலனுக்காக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தமை இப்போது வெளிப்படுகின்றது.
இதைவிட இந்தப் போராட்டம் முன்னெடுத்த காலம் தவறானது. உலகில் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டு மரணங்கள் தொடராக நடைபெறும் நேரத்தில் இதனை முன்னெடுக்க முடியாது. சம்பள அதிகரிப்பு அல்லது முரண்பாடு தீர்த்தல் தொடர்பாக முன்னைய ஆட்சிக்காலத்தில் ஏன் வாய்திறக்கவில்லை. ஏன் இதுபோன்ற போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. இப்போராட்டம் தொடர்பில் கல்வித்துறை சார்ந்த புத்திஜீவிகள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் அதிருப்தி வெளியிட்டனர்.
இப்போது ஊடகங்களே வெளிப்படையாக மாணவர் நலன்சார்ந்து அதிபர்கள், ஆசிரியர்களை தொழிற்சங்கங்களை விமர்சிக்கத் தொடங்கிவிட்ட காரணம் நாற்பது ஆண்டுகால யுத்தத் சூழ்நிலையில் நாம் ஒருபோதும் கற்பித்தல் செயற்பாடுகளை இடைநிறுத்தியது கிடையாது. போரட்டம் நடைபெற்றபோது பதுங்குகுழிகளுக்குள்ளே எமது ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டனர். பிள்ளைகளின் கல்வியை பணயம் வைப்பது தெய்வகுற்றமாகும்.
இப்போதும் கற்பித்தல் பணியை இடைநிறுத்தியது தவறானது என்றுதான் நாம் சொல்கின்றோம். இவ்விடயம் தொடர்பில் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தி நிலை உருவாகியுள்ளது. தற்போது சமூக மட்டத்திலும் பலவிதமான கருத்துக்கள் உருவாகியுள்ளன.
ஒரு தனி மனிதனின் அரசியல் சூழ்ச்சியால் பல லட்சம் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளதாக பேசுகின்றனர். இதை விட ஒன்றரை ஆண்டுகள் கற்பித்தல் பணியில்லாமல் 70 வீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சித்திபெற்று உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். பெருமளவான மாணவர்கள் பிரத்தியேக கல்வியை நாடினர் என்பதும், அதிபர், ஆசிரியர்களின் பிள்ளைகள் சிறந்த பெறுபேறுகளை எவ்வாறு பெற்றனர் என்ற கேள்விகளும் சமூக மட்டத்தில் எழுந்துள்ளன. இலவசமாக சேவை செய்த ஆசிரியர்கள் இன்று பணம் வாங்கி கல்வி வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எமது இனம் சார்ந்த குழந்தைகள் ஏற்கனவே பலவற்றை இழந்துள்ளனர். அவர்கள் இன்னும் பின்னிலைக்குச் செல்ல நாம் காரணமாக இருக்க மாட்டோம். ஆகையால் பாடசாலைகள் ஆரம்பமானதும் எமது அதிபர், ஆசிரியர்கள் முழுமையாக பணி செய்வார்கள் என்றார்.