கர்நாடகாவில் அரசுப்பேருந்தை கடத்திச் சென்று டீசல் திருடிய கும்பல் – அதிர்ந்துபோன அதிகாரிகள்
கர்நாடகாவில் அரசுப்பேருந்தை கடத்திச் சென்று டீசல் திருடிய சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநில போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிபவர் ஹனுமன்த்ராயா. இவர் (KA 06 R-0858) என்ற பதிவெண் கொண்ட அரசுப்பேருந்தை குப்பி பேருந்து நிறுத்தத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 9.40 மணி நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் ஓட்டுநருக்கான விடுதியில் உறங்க சென்றுவிட்டார். மறுநாள் காலை பேருந்தை எடுப்பதற்காக குப்பி பேருந்து நிலையத்துக்கு காலை 6 மணிக்கு வந்துள்ளார். அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்தை காணவில்லை.
இதனையடுத்து டெம்போ அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் காணாமல் போன பேருந்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாயமான பேருந்தில் ஜிபிஆர்எஸ் கருவி பொறுத்தப்பட்டிருந்ததால் அதனைக்கொண்டு பேருந்து இருக்கும் லோகேஷனை ட்ராக் செய்தனர். மாயமான பேருந்தானது குப்பி பேருந்து நிலையத்தில் இருந்தில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜனனினஹள்ளி பகுதியில் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பகுதிக்கு காவலர்கள் விரைந்தனர். அப்போது அங்கு பேருந்து அநாதையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பேருந்தில் இருந்த டீசல் முழுமையாக திருடப்பட்டிருந்தது. டீசலுக்காக பேருந்து கடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறுகின்றனர். கர்நாடகத்தில் டீசல் திருட்டு அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கார், இருசக்கர வாகனங்களில் பெட்ரோல், டீசல் திருடப்படுவதாகவும் அதனை தடுக்க போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட பெருநகரங்களில் எரிபொருள் திருட்டு வழக்குகள் முதலில் பதிவானது.தற்போது சிறிய ஊர்களில் எரிபொருள் தொடர்பான வழக்குகள் பதிவாகிறது என காவல்துறையினர் கூறுகின்றனர்.