திருப்பூரில் வழிப்பறியில் ஈடுபட்ட போதை ஆசாமிகள்..கட்டிவைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்
திருப்பூரில் பட்டப்பகலில் மது போதையில் சாலையில் சென்ற பெண்கள் மற்றும் தொழிலாளர்களிடம் கத்தி மற்றும் மது பாட்டில் கொண்டு மிரட்டி பணம் பறிக்க முயன்றவர்களை பொதுமக்கள் கட்டிவைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
திருப்பூர் அரிசி கடை வீதியில் ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன . தீபாவளி பண்டிகை நெருங்கி வரக் கூடிய சூழ்நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பட்டபகலில் அரிசி கடை வீதி சாலைகளில் அமர்ந்து மது அருந்தும் சிலர் அவ்வழியே செல்லும் பெண்கள் மற்றும் தொழிலாளர்களிடம் கத்தி மற்றும் மது பாட்டிலை கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .
இதைக்கண்ட அப்பகுதி தொழிலாளர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட மது போதையில் இருந்த நபர்களை கட்டிவைத்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மதுபோதையில் இருந்தவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அரிசி கடை வீதியில் இதுபோல் சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதாகவும் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.