கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் நகை கடன் தள்ளுபடி: அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரனுக்கு உட்பட நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இது தொடர்பான அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் 5 சவரன் வரை தங்க நகைகளை வைத்து கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 13ம் தேதி அறிவித்தார். நகைக்கடன் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் நகைக்க்டான் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கும் மேல் ஆவதால் நகைகள் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நகைக்கடன் பெற்றோர் உள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 15 கூட்டுறவு சங்கங்களில் 12 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றதையடுத்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். கூட்டுறவுத்துறையில் வெளிப்படைத்தன்மையோடு பணி நியமனம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஒரு வாரத்தில் அரசாணை
தொடர்ந்து பேசிய அவர், 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும். நகைக்கடன் தள்ளுபடியால் சுமார் 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார். மேலும், கிராம கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களை உறுப்பினர்களாக்கி கல்வி தகுதிக்கு ஏற்ப தொழிற்கல்வி மாணவர்களுக்கு தொழில் தொடங்க 1% வட்டியில் கடன் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
கூட்டுறவு மருந்தகங்கள்
99.3% பேருக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2400 கோடி அளவில் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது . டெல்டா மாவட்டங்கள், சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய கூட்டுறவு மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளது.
வட்டியை குறைப்பது குறித்து ஆலோசனை
சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வட்டியை குறைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு பண்டகசாலைகளில் தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.