தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித் தொடருக்கான மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல்.
தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் 2020 களமதிப்பீட்டு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் நிறுவனச் சுற்றுச்சூழல் அக,புற சுத்தம் , வாடிக்கையாளர் திருப்தி, வாடிக்கையாளர் பிரச்சினைகளை அறிக்கையிடும் முறை, Covid 19 சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்தல், நேர முகாமைத்துவம், வாகன தரிப்பிட ஒழுங்கு, கழிவுப்பொருள் முகாமைத்துவம் உள்ளிட்ட உற்பத்தித்திறன் செயற்பாட்டுக்கான விடயங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள், உற்பத்தித்திறன் இலக்கை நோக்கி நகர நிறுவனச் சூழல் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி உள்ளிட்ட விடயங்களை தொடர்ச்சியாக நாளாந்த செயற்பாடுகளின் ஊடாக அனைவரும் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
மேலும் உற்பத்தித்திறன் செயற்பாட்டுக்கான அனைத்து பயிற்சிகள், வளங்கள் மற்றும் அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாகவும் குறித்த பயிற்சிகள் உத்தியோகத்தர்களது மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது எனவும் சுட்டிக் காட்டியதுடன் , குறித்த உற்பத்தித் திறன் செயற்பாட்டிற்கு அனைவரது கூட்டுப்பொறுப்பு மிக மிக அவசியம் என தெரிவித்தார்.
மேலும்,குறித்த உற்பத்தித்திறன் செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்ட குழுக்கள் குறித்த செயற்பாடுகள் திறம்பட மேற்கொள்ளலை உறுதிப்படுத்துவதற்காக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உற்பத்தித்திறன் செயற்பாட்டிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.