பிறந்து 40 நாட்களே ஆன குழந்தைக்கு இருதய பாதிப்பு.. முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை
தமிழகத்தில் முதன் முறையாக பிறந்து 40 நாட்களே ஆன குழந்தைக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அட்டை நேற்று வழங்கப்பட்டது.இருதய பாதிப்பு உள்ள அக்குழந்தைக்கு காப்பீட்டு திட்டம் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது.
கோவையில் சரணாலயம் என்ற தத்து வழங்கும் மையத்தில் பிறந்து 40 நாட்களே ஆன பெண் குழந்தை பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த குழந்தைக்கு இருதய பாதிப்பு இருப்பதும் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரியவந்தது. தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள 1.70 லட்சம் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சரணாலயம் அமைப்பினர் குழந்தையின் அறுவை சிகிச்சை தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அக்குழந்தைக்கு தமிழக அரசின் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்க மாவட்ட ஆட்சியர் சமீரன் நடவடிக்கை மேற்கொண்டார்.
அரசால் தத்தெடுக்கப்பட்ட அந்த 40 நாள் குழந்தைக்கு உடனடியாக மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் இருதய நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார். தமிழகத்தில் முதன் முறையாக பிறந்து 40 நாட்களே ஆன குழந்தைக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கி சிகிச்சை மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.