கரும்புத்தோட்டக் காணியை மீட்டுத்தந்தமைக்காக டக்ளசை கௌரவித்த மக்கள்!
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள 196 ஏக்கர் காணியை சில தனிப்பட்டவர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு பிரதேச மக்களுக்கே வழங்கியமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவித்து விசேட கௌரவிப்பு நிகழ்வை பிரதேச மக்கள் நடாத்தினர்.
அக்கராயன் கமநலசேவை பகுதியைச் சேர்ந்த கண்ணகைபுரம், ஸ்கந்தபுரம், அக்கராயன், கோணாவில், ஆனைவிழுந்தான் மற்றும் வன்னேரிக்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களே, ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணிப் பகுதிக்குள்ளேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்த விசேட கௌரவிப்பு நிகழ்வை நடாத்தினர்.
1965ம் ஆண்டு மண்ணியல் நிபுணர் கந்தையா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு 1983கள் வரையில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுவந்த கரும்புத்தோட்ட மற்றும் சர்க்கரை, பாணி உற்பத்தி முயற்சிகள் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிச் சூழ்நிலைகளால் கைவிடப்பட்டிருந்த நிலையில், முன்னர் அந்த உற்பத்தி முயற்சியில் சம்பந்தப்பட்டிருந்தவர் என்று சொல்லப்படுபவருடன் சேர்ந்த ஒரு குழுவினர் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட 196 ஏக்கர் காணியையும் அத்துமீறி ஆக்கிரமித்திருந்தனர்.
காணிகளற்ற வறிய மக்களுக்கு இந்தக் காணியை வழங்கவேண்டும் என்ற அந்தப் பிரதேச மக்களின் நியாயமான கோரிக்கையை இதுவரை எந்தவொரு அரசியல் தரப்பும், அரச அதிகாரிகளும் நிறைவேற்றாமல் மக்களை அச்சுறுத்தி அத்துமீறிய ஆக்கிரமிப்பாளர்களைப் அவர்கள் பாதுகாத்து வருவதாக, 2020இல் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமைப் பொறுப்பை ஏற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மக்கள் முறையிட்டிருந்தனர்.
உடனடியாக இதுபற்றி ஆராய்ந்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமது மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கனைப் பணித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதுதொடர்பான முழு விபரங்களையும் கவனமாக ஆராய்ந்து, கரும்புத்தோட்டக் காணியை பிரதேச மக்களுக்கே வழங்கவேண்டும் என்று கடந்த ஜுன் 18ம் திகதி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்திய விசேட கலந்துரையாடலில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
பிரதேச மக்களின் முழுமையான பங்களிப்புடன் மீண்டும் கரும்புத்தோட்ட முயற்சியை இந்தப் பகுதியில் உயிர்ப்பித்து இந்தப் பகுதியின் பொருளாதார முன்னேற்றத்துக்கு இதன்மூலம் ஈட்டப்படும் வருமானத்தைப் பயன்படுத்தவேண்டும் என்றும் இதன்போது அவர் தெளிவான அறிவுறுத்தலை வழங்கியிருந்தார்.
முழுமையாக கரும்புத்தோட்டம் உருவாக்கப்படும் வரையில் பிரதேசத்தில் வாழும் வறிய காணிகற்ற மக்களுக்கு நெல் மற்றும் மறுதானியப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு காணியைப் பகிர்ந்து வழங்கவும் அவர் பிரதேச அமைப்புக்களைப் பணித்திருந்தார்.
இதன்படி, கரும்புத்தோட்டக் காணியை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்த பிரதேசத்தைச் சேர்ந்த 12 அமைப்புக்களூடாக இம்முறை காலபோக நெற்செய்கைக்காக காணிகள் வழங்கப்பட்ட நிலையில், பிரதேச மக்கள் தமது மகிழ்ச்சியையும், நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விசேட கௌரவிப்பு நிகழ்வை கரும்புத்தோட்டக் காணி பிரதான வளாகத்துக்குள்ளே நடாத்திருந்தனர்.
12 பிரதேச அமைப்புக்களினதும் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் கிராமசேவையாளருமான சபாரத்தினம் தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் தயாபரன், கரும்பு ஆராய்ச்சி நிறுவன பொறுப்பதிகாரி சிவபாலன் மற்றும் பிரதேச அமைப்புக்களின் தலைவர்கள், பிரதேச பொதுமக்களுடன் இணைந்து இந்த கௌரவிப்பு நிகழ்வை நடாத்தியிருந்தனர்.
பிரதேச மக்களின் நன்றியறிதலை வெளிப்படுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்த பிரதேச மக்கள், தமக்கு நீதியைப் பெற்றுத்தந்தமையால் தாம் மிகுந்த உற்சாகமடைந்திருப்பதாகவும் அமைச்சரிடம் நன்றியுணர்வுடன் தெரிவித்திருந்தனர்.
நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன், அவரது இணைப்பாளரும், முன்னாள் மகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன், மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கரும்புத்தோட்டக் காணியை மேலும் விரிவாக்கி பாரிய சீனித் தொழிற்சாலை ஒன்றை உருவாக்கும வகையில் மேலதிகமாக 2500 ஏக்கர் காணியைப் பெற்றுத்தருமாறு இந்த நிகழ்வில் பிரதேச மக்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றித்தருவதாகவும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி வழங்கியபோது, பலத்த கரகோஷத்துடன் மக்கள் அதனை வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.