மழை இல்லாததால் முளைக்காமல் போன பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் விதைக்கப்பட்ட மானாவாரி பயிர்கள்- வேதனையில் தூத்துக்குடி விவசாயிகள்
தென்மேற்குப் பருவமழை முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முப்புளிவெட்டி, புதியம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், மானாவாரி பயிர்களை விதைத்தனர். இதன்படி, உளுந்து, பாசிப் பருப்பு, சோளம், மாட்டுத் தீவனமாக பயன்படுத்தப்படும் கருப்பு சோளம், கம்பு உள்ளிட்டவற்றை விதைத்தனர்.
ஆனால், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழை பெய்யாததால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் முளைக்கவில்லை. இதனால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை, செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், பருவமழைக்குப் பிறகு விதை முளைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, ஓட்டப்பிடாரம் வட்டத்தில் மழை பெய்தபிறகு, விதைப்புப் பணிகளை மேற்கொள்ள வங்கிகள் மூலமாக அரசு உதவ வேண்டும் என்றும், வேளாண்மைத் துறை மூலமாக இலவசமாக விதைகளை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் தேவையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.