அணையில் இருந்து அதிகபட்ச தண்ணீரை திறந்து விடுங்கள் – மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை நெருங்குவதால், அணையில் இருந்து அதிகபட்ச தண்ணீரை கால்வாய் வழியாக வைகை அணைக்கு திறந்து விடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

கேரள மாநிலத்தின் கோட்டயம் உள்ளிட்ட தென்மத்திய மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு முன்னர் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் சிக்கியும் 40க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். அங்கே இன்னும் மழை நீடித்து வருகிறது. அதேபோல, முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்தநிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுயுள்ளார். அதில், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டு பக்கம் வினாடிக்கு 1,750 கனஅடி தண்ணீரை திருப்பி விட்ட பிறகும், மாலை 4 மணி நிலவரப்படி, அணைக்கு நிகர நீர்வரத்து வினாடிக்கு 2,109 கன அடியாக இருக்கிறது. தற்போது நீர்மட்டம் 136.85 அடியாக உள்ளது. மழை மேலும் தீவிரம் அடைந்தால், அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்து விடும் என்று அஞ்சப்படுகிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாட்டுக்கு கால்வாய் வழியாக படிப்படியாக தண்ணீரை திறந்துவிட வேண்டிய அவசர தேவை ஏற்படும். ஆகவே, தாங்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகபட்ச தண்ணீரை கால்வாய் வழியாக வைகை அணைக்கு திறந்து விடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அப்படி திறந்து விடும்போது, மதகுகளை திறப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே அது குறித்து கேரள அரசுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதன்மூலம், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.