தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 36 பேர் கைது!
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று காலை விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 324 ஆக உயர்வடைந்துள்ளது.
மாகாண எல்லைகைளை கடக்கின்றமை தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் 158 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 பிரதேசங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று 776 வாகனங்களில் மேல் மாகாணத்துக்கு உள்நுழைய முற்பட்ட 1,654 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று மேல் மாகாணத்திலிருந்த வெளியேற முற்பட்ட 514 வாகனங்களில் பயணித்த 1,379 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி மேல் மாகாணத்திலிருந்த வெளியேற மற்றும் உள்நுழைய முற்பட்ட 193 வாகனங்கள் 437 பேருடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமையைக் கருத்தில்கொண்டு பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டியது அவசியம் என்று பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.