இந்தியாவில் சமூக ஊடகத்தில் பகிரப்படும் வெறுப்பை தூண்டும் பேச்சுகள், வன்முறை கொண்டாட்டங்கள் – கட்டுப்படுத்த திணறும் ஃபேஸ்புக்!

இந்தியாவில் ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் பகிரப்படும் வெறுப்பை தூண்டும் பேச்சுகள், வன்முறை கொண்டாட்டங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியாமல் ஃபேஸ்புக் நிறுவனம் போராடி வருவதாக தகவல் கசிந்துள்ளது.

ஃபேஸ்புக் சமூக ஊடகம் உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரையும் ஒன்றிணைப்பதே சமூக ஊடகத்தின் நோக்கமாக இருந்தாலும், பிரிவினைவாதம், வெறுப்பு பேச்சுகள், வன்முறையை கொண்டாடும் பதிவுகள் போன்றவை அதிகளவில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் அறிக்கையை தி நியூயார்க் டைம்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் ஃபேஸ்புக் மூலம் பரப்படும் வதந்திகள், வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறை கொண்டாட்டங்களை கட்டுப்படுத்த முடியாமல் அந்நிறுவனம் போராடிவருவதாக கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய எதிர்ப்பு உள்ளடங்கள் நிறைந்த பக்கங்கள், குழுக்கள் ஃபேஸ்புக்கில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

கேரளாவில் வசிக்கும் ஒரு நபர் ஃபேஸ்புக் மூலம் எதிர்கொள்பவை என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக ஃபேஸ்புக் ஆராய்ச்சியாளர் ஒருவர் புதிதாக கணக்கை தொடங்கியுள்ளார். பின்னர்,குழுக்களில் சேரவும், வீடியோக்களைப் பார்க்கவும் மற்றும் தளத்தில் புதிய பக்கங்களை ஆராயவும் ஃபேஸ்புக் அளிக்கும் பரிந்துரைகளை அவர் பின்பற்றியுள்ளார். இதில், வன்முறை கொண்டாட்டங்கள், வதந்திகள், வெறுப்பு பேச்சுகள் போன்றவற்றையே அவர் அதிகம் எதிர்கொண்டது தெரியவந்தது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 34 கோடி பேர் ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது. எனினும் இந்தியாவில் பகிரப்படும் இத்தகைய தவறான கருத்துகளை கட்டுப்படுத்த தேவையான பணியாட்கள், வசதி போன்றவை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இல்லை. தவறான தகவலை வகைப்படுத்துவதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் செலவழித்த நேரத்தில் 87 சதவீதம் அமெரிக்காவுக்காகவே செலவிடப்பட்டுள்ளது. 13 சதவீதம் மட்டுமே பிற நாடுகளுகாக செலவிடப்பட்டுள்ளது.

தேர்தல் நேரங்களில் போலியான கணக்குகள் அதிகமாக தொடங்கப்படுகின்றன. ஆளும் கட்சி, எதிர்கட்சி தொடர்புடைய நபர்கள் போலியான கணக்குகளை உருவாக்கி அதன்மூலம் தவறான தகவல்களை பதிவிட்டு மக்களை திசைத் திருப்புகின்றனர். இதன் மூலம் தேர்தல்களை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆய்வில், மேற்கு வங்கத்தில் தோ்தல் குறித்து அதிகமாகப் பாா்வையிடப்பட்ட பதிவுகளில் சுமாா் 40 சதவீதம் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட நம்பகத்தன்மையற்ற ஃபேஸ்புக் கணக்கு 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றதும் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.