இலங்கையில் நாளொன்றிற்கு 38 கோடி சிகரட் செலவிடப்படுகின்றது இளைஞர் வலையமைப்பு தகவல்.
புகைப்பொருள், மதுசாரம் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் துரித அபிவிருத்தியை நோக்கிய வேலைத்திட்டம்’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் சில கோரிக்கைகளை முன்வைப்பற்காகவும், குறிப்பிட்ட கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுமெனில் ஏற்படக்கூடிய அனுகூலங்கள் தொடர்பிலும் விளக்கமளிப்பதற்காக யான் இளைஞர் குழுமத்தினர் யாழ் ஊடக மன்றத்தில் நேற்று ஊடகச் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர். அதில் வெளியிட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு
மதுசாரம் மற்றும் புகைப்பொருள் பாவனையால் வருடாந்தம் 35000 பேர் மரணத்தைத் தழுவுகின்றனர். மேலும் ஹெரோயின் போன்ற ஏனைய போதைப்பொருள் வகைகளினால் பெருமளவிலானோர் உள நோய்களிற்கு ஆளாகுகின்றனர். இலங்கையில் நாளொன்றிற்கு ரூபா 38 கோடி சிகரட்டிற்காக செலவிடப்படுகின்றது. சாராயம், பியர் பாவனைகளிற்காக தினமும் ரூபா 59 கோடி எமது மக்களால் செலவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலைமையில், புகைப்பொருள், மதுசாரம் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு இம்முறை பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் எவ்வறான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்பதற்கு துறை சார்ந்த நிபுணர்கள் கீழ்காணும் 08 பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.
01. தனி சிகரட் மற்றும் புகைப்பொருட்களின் விற்பனையைத் தடை செய்தல்.
02 வெற்றுப்பொதியிடல் முறைமை அங்கீகரிக்கப்படல்.
03கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மீற்றர்களுக்கு இடைப்பட்ட தூரத்தில் புகைப்பொருட்களின் விற்பனையைத் தடை செய்தல்.
04. புகையிலை நிறுவனத்திடமிருந்து முறையான வரி அறவீட்டுக் கொள்கையை வகுத்துக்கொள்ளல்.
05. மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகார சபை சட்டத்திற்கு துறை சார்ந்த நிபுணர்களால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை நடைமுறைப்படுத்தல்.
06. 2016ம் ஆண்டு பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மதுசாரம் தொடர்பான கட்டுப்பாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்.
07. இலங்கையில் கஞ்சாவை சட்ட ரீதியாக்குவதற்கு இடமளிக்காமல் இருத்தல்.
08. ஹெரோயின் உட்பட ஏனைய அனைத்து போதைப்பொருட்கள் தொடர்பிலும் தற்போது காணப்படும் சட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்துதல்
மேற்குறிப்பிட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கையர்களின் சுகாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதனூடாக நாட்டு மக்களை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். இம்முறை பாராளுமன்ற தேர்தல் போட்டியிடும் உங்களின், உங்களது கட்சியில் புகைத்தல் பாவனையைக் குறைப்பதற்கும், மதுசாரப்பாவனையை குறைப்பதற்கும், போதைப்பொருள் பாவனையைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளவிருக்கும் செயற்பாடுகள் தொடர்பில் பொது மக்களுக்கு தெரிவிப்பதற்கான வாய்ப்பு வகுக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகளை செயற்படுத்துமாறும், இம்முறை வேட்பாளர்களுக்கு வாக்களிக்க காத்திருக்கும் மக்கள் இது தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர் ஆகவே பெரது மக்களின் எதிர்ப்பார்பபை நிறைவேற்றுவதற்கு வேட்பாளர்கள் முன்வர வேண்டும் எனவும் யான் இளைஞர் குழுமத்தினர் ஊடகச்சந்திப்பின் போது தெரிவித்தனர்.
அத்தோடு, www.adicsrilanka.org எனும் இணையத்தளத்திற்கு செல்வதன் மூலம் இலத்திரனியல் முறையில் இச்செயற்றிட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்கக்கூடிய சந்தர்ப்பமும் வேட்பாளர்களுக்கு உள்ளது. உங்களது கட்சியின் மற்றும் வேட்பாளர்களின் ஒத்துழைப்பை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகம் வாயிலாக நாம் மக்களுக்கு தெரிவிப்போம் எனவும் யான் குழுமத்தினர் குறிப்பிட்டனர்.
Comments are closed.