‘அனைவரையும் சமமாக நடத்துங்கள்’: தற்கொலைக்கு முன் வீடியோ வெளியிட்ட கர்நாடக மாணவர்
கல்வித்துறையில் மாற்றம் செய்ய வலியுறுத்தி கர்நாடக பொறியியல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் ஹிரியலுவின் அர்சிகேரி பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமை கல்லூரி விடுதியில் தூக்கிட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து தற்கொலைக்கு முன்பாக அவர் பதிவு செய்த விடியோவை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். மொத்தம் 13 நிமிடம் 20 நொடி உள்ள அந்த விடியோவில் தற்போதுள்ள கல்விமுறை சரியில்லை எனவும், கல்விமுறை மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் மாணவர் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மரணத்தின் மூலம் சமூகத்தில் கல்விமுறையின் மீது மக்களுக்கு கவனம் திரும்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர் மாநில முதல்வர், கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஒருவர் மேற்கொள்ளும் தொழிலின் அடிப்படையில் அவர் மரியாதை குறைவாக நடத்தப்படக் கூடாது எனத் தெரிவித்துள்ள அந்த மாணவர், அனைவரும் சமமாக உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
“ஒருவர் எந்த வேலை செய்தால் என்ன? ஒருவர் துப்புரத் தொழிலாளியாக இருக்கலாம். அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்” என அவர் விடியோவில் தெரிவித்துள்ளார்.
மாணவரின் இந்த வாக்குமூலம் வாயிலாக கல்லூரியில் சாதியின் அடிப்படையில் வேறுபாடு காட்டப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக காவலர்கள் சந்தேகிக்கின்றனர். எனினும் மாணவரின் தற்கொலை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.