வார்னர் அதிரடி ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி.
டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக குசல் பெரேரா, சரித் அசலங்கா தலா 35 ரன்களைச் சேர்த்தனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைபற்றி அசத்தினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் ஃபிஞ்ச் – டேவிட் வார்னர் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தது. அதிலும் ஃபார்மில் இல்லாமல் இருந்த டேவிட் வார்னர் இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடினார்.
அதன்பின் 37 ரன்களில் ஆரோன் ஃபிஞ்ச் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேக்ஸ்வெல்லும் 5 ரன்களில் நடையைக் கட்டினார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டேவிட் வார்னர் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றியும் உறுதியானது. இறுதியில் 17 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.