இராணுவத் தலைமையகத்திற்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு

மூத்த இராணுவ அதிகாரிகளால் அரச அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரத்தை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்தின் அமைச்சரும் இராணுவ அதிகாரிகளும் முயற்சிப்பதாக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதியின் கீழ் உள்ள இராணுவத்திற்கு எதிராக முன்னணி சுற்றுசூழல் அமைப்பொன்றினால் எழுத்துமூலம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

”வில்பத்து தேசிய சரணாலய அதிகாரிகள் மீதான தாக்குதல் மற்றும் அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவத்தை மூடிமறைக்குமாறு இராணுவ தலைமையகத்தினால் வன ஜீவராசிகள் அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் இராணுவத்திற்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைக்காமல் இருக்குமாறு வஜீவராசிகள் அமைச்சுக்கு வனஜீவராசிகள் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்”

புத்தளம் இராணுவ முகாமைச் சேர்ந்த உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு, வில்பத்து தேசிய சரணாலயத்தின் மஹவெவ சுற்றுலா மாளிகைக்கு வருகைதந்து, அந்த மாளிகையின் பராமரிப்பாளர் மற்றும் அதன் வழிகாட்டி ஆகியோரை தாக்கியுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர காரியவசம் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான அரச சொத்துக்களுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சரணாலயத்தின் தலைமையகத்திற்கு வருகைதந்து அதிகாரிகளை தாக்க முயற்சித்த இராணுவ உயர் அதிகாரிகள் கலகத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு படையினர் மீது சிவில் மக்கள், நம்பிக்கை வைத்துள்ளார்கள் எனவும் இராணுவத்தினர் தமது பாதுகாப்பை உறுதிசெய்வார்கள் என பொதுக்கள் எதிர்பார்க்கின்றார்கள் எனவும் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தனது கடிதத்தில் நினைவூட்டியுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர், அதே பாதுகாப்பு படையினர் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றமை தொடர்பிலும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும்வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்களிப்பு வழங்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு நிலையம் ஜனாதிபதியை கோரியுள்ளது.

அத்துடன் தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினரிடம் இருந்து அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அந்த நிலையம் ஜனாதிபதியை மேலும் வலியுறுத்தியுள்ளது.

Comments are closed.