பொதுத் தோ்தலில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சி அமைப்பு.
ஜப்பான் பொதுத் தோ்தலில் பிரதமர் புமியோ கிஷிடா தலமையிலான ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பே பிரதமராகத் தெரிவான புமியோ கிஷிடாவுக்கு இது பெரும் வெற்றியாக அமைந்துள்ளது.
பொதுத் தோ்தலில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 261 ஆசனங்களை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே தனிப்பொரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவராக புமியோ கிஷிடா தோ்ந்தெடுக்கப்பட்டார். ஜப்பானிய வழக்கப்படி ஆளும் கட்சித் தலைவர் பிரதமராக பொறுப்பேற்பார் என்பதால் புமியோ கிஷிடா பிரதமரானார். பதவியேற்று சில வாரங்களில் பாராளுமன்றைக் கலைத்து அவா் தோ்தலை எதிர்கொண்டார்.
ஜப்பானிய அரசியலில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் கொவிட் தொற்றுநோயைக் கையாண்ட விதம் குறித்து கடும் விமர்சனங்களை இக்கட்சி எதிர்கொண்டது. இந்த விமர்சனங்களை அடுத்து ஒரு வருடமாகப் பிரதமராக இருந்த யோஷிஹிட் சுகா, பதவி விலகினார்.
இதனையடுத்தே புமியோ கிஷிடா பிரதமராகப் பதவியேற்றார். இவர் 2012 முதல் 2017 வரை நாட்டின் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார்.
இந்நிலையிலே நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுத் தோ்தலில் பிரதமர் புமியோ கிஷிடா தலமையிலான ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
465 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றில் பெரும்பான்மைக்கு 233 இடங்கள் தேவை என்ற நிலையில் பெரும்பான்மை பெற லிபரல் டெமாக்ரடிக் கட்சி கூட்டணிகளை நம்பியிருக்க வேண்டி வரும் என தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புக்கள் வெளியானபோதும் அவற்றை முடிவுகள் பொய்யாக்கியுள்ளன.
இதேவேளை, ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட கோமிட்டோ கட்சி 32 இடங்களை வென்றுள்ளதால் கூட்டணிக்கு மொத்தம் 293 இடங்கள் கிடைதுள்ளன.