இராஜாங்க அமைச்சர்கள் எனக்கு எதிராகச் சேறுபூசும் பிரசாரங்கள் மைத்திரி பகிரங்கக் குற்றச்சாட்டு.
சில இராஜாங்க அமைச்சர்கள் எனக்கு எதிராகச் சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்று முன்னான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பக்கமுன நகரில் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சந்திக்கச் சென்றிருந்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“விவசாயிகள் குறித்து தற்போதைய அரசிடம் நான் எந்தளவுக்குப் பேசினாலும் அரசு செவிமடுப்பதில்லை. கமத்தொழில் அமைச்சர் விவசாயத்தை அறிந்தவர் அல்லர். நான் பல முறை கமத்தொழில் அமைச்சருடன் விவசாயிகளில் பசளைப் பிரச்சினை பற்றி பேசினேன். எனினும், சாதகமான பதில் கிடைக்கவில்லை.
சில இராஜாங்க அமைச்சர்கள் எனக்கு எதிராகச் சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை காரணமாக என்னால், பொலனறுவைக்குச் செல்ல முடியாதுள்ளது என நான் கூறினேன். அதனை அடிப்படையாகக்கொண்டே இராஜாங்க அமைச்சர்கள் எனக்கு எதிராகச் சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். அவற்றை நான் கவனத்தில்கொள்ளப் போவதில்லை” – என்றார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி ஒன்றை எழுப்பிய விவசாயி ஒருவர், ‘நீங்கள் மீண்டும் பதவிக்கு வந்தால் விவசாயிகளுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?’ எனக் கேட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த மைத்திரிபால, “நான் விவசாயிகளை கஷ்டத்தில் தள்ளமாட்டேன். சேதனப் பசளை மூலம் நெல்லைப் பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்குப் படிப்படியாகப் பழக்கப்படுத்துவேன்.
உலகில் எந்த நாடும் நூற்றுக்கு நூறு வீதம் சேதனப் பசளையைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதில்லை.
ஆஸ்திரேலியா கூட சுமார் 50 வீதமே சேதனப் பசளையைப் பயன்படுத்தும் விவசாயத்தைச் செய்கின்றது. நான் 1980ஆம் ஆண்டுகளில் இருந்து விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்து வருகின்றேன்.
விவசாயிகள் விஷத்தை அருந்தி தற்கொலை செய்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் நான், விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காகப் பொலனறுவை நகரில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி முதல் முறையாகச் சவப் பெட்டிகளைக் கூடச் சுமந்திருக்கின்றேன்” – என்றார்.