தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையரின் உத்தரவு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆயத்தப்பணிகள் குறித்த மண்டல ஆய்வுக் கூட்டம் சென்னை பெருநகர மாநகராட்சி தலைமை அலுவலகம் உள்ள ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், நகர்ப்புற தேர்தல் நடுநிலையுடனும் பாதுகாப்புடனும் நடைபெற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர்களான மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மாவட்ட காவல் அதிகாரிகள் தங்கள் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.
பின்னர், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேசுகையில், நகர்ப்புற தேர்தல் நடுநிலையுடனும் பாதுகாப்புடனும் நடைபெற வேண்டும். இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு வந்துள்ள 6 மாவட்டங்களைச் சார்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இக்கூட்டத்தில் அளிக்கப்படும் பயிற்சிகளை முறையாக அறிந்து கொண்டு தேர்தல் பணியாற்ற வேண்டும். தேர்தல் பணிகள் குறித்து தங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களை வெளிபடுத்தி இந்தக் கூட்டத்தின் வாயிலாக தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் விழுப்புரம் ஆட்சியர் த.மோகன், காஞ்சீபுரம் ஆட்சியர் ஆர்த்தி, கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் விஷூ மகாஜன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர்.
இவர்களுடன், விழுப்புரம், காஞ்சீபுரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.