ஹவுதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 39 பேர் பலி!
யேமனின் மரிப் மாகாணத்தில் மசூதி மற்றும் மதரசா பள்ளி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 39 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்ததாக யேமன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மரிப்பின் தெற்கில் உள்ள அல்-ஜுபா மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளை நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணைகள் மக்கள் செறிந்து வாழும் அல்-அமுத் பகுதியில் உள்ள மசூதி மற்றும் தார் அல்-ஹதீத் மதரசா ஆகிய இடங்களில் விழுந்து 39 பேர் வரை கொல்லப்பட்டதாக அமைச்சர் முயம்மர் அல்-எரியானி தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டதாக உடனடியாக அறிவிக்கப்பட்டபோதும், பின்னர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 என அறிவிக்கப்பட்டது.
எனினும் இந்தத் தாக்குதல் குறித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமை அன்று, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மரிப்பில் அல்-ஜுபா மாவட்டத்தில் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் ஒன்றில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக யேமன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எண்ணெய் வளம் மிக்க மாரிப் மாகாணத்தைக் கைப்பற்ற கடந்த பெப்ரவரி முதல் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளனர்.
தென்மேற்கு ஆசிய நாடான யேமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுதி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு யேமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், யேமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர். யேமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. யேமன் போரில் இதுவரை 1 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது