அமேசானில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்வதருக்கு அனுப்பிய நிஜமான பாஸ்போர்ட் !!
அமேசானில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்வதருக்கு, கவருடன் சேர்த்து நிஜமான பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
காய்கறிகள், பழங்கள், உணவு முதல் மின்னணு சாதனங்கள் வரை எதுவாங்குவது என்றாலும் நம் கைகளில் உள்ள மொபைல் மூலம் சில நொடிகள் செலவிட்டு பொருட்களை வீட்டுக்கே வரவழைத்து விட முடிகிறது. மக்கள் இதுபோன்ற முறைக்கு மாறிவிட்டதால், ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை ஷோரூம்கள் இல்லாமல் நேரடியாகவே புக்கிங்குகளை பெற்று வீடுகளுக்கே டெலிவரி செய்து வருகிறது. இப்படியாக வணிகம் அனைத்தும் ஸ்மார்டாக சென்று கொண்டிருக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் தான் பெரும்பாலான மக்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதனிடையே இது போல இ–காமர்ஸ் தளங்களில் பொருட்கள் வாங்குவது பல்வேறு பிரச்னைகளுக்கும் ஆளாகியிருக்கிறது. சமீபத்தில் அமேசானில் ஐபோன் ஆர்டர் கொடுத்தவருக்கு பாத்திரம் கழுவும் சோப்பும், 5 ரூபாய் காயினும் பார்சலில் வந்தது. மொபைல் ஆர்டர் கொடுத்தவருக்கு செங்கல் கூட பார்சலில் வந்திருக்கிறது. இது போல பல சம்பவங்களை வாடிக்கையாளர்கள் சந்தித்திருக்கும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் வேறு விதமான அனுபவத்தை சந்தித்திருக்கிறார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள கனியம்பேட்டா எனும் பகுதியைச் சேர்ந்த மிதுன் பாபு என்பவர் கடந்த அக்டோபர் 30ம் தேதி பாஸ்போர்ட் கவர் ஒன்றை ஆர்டர் கொடுத்திருக்கிறார். பாபுவுக்கு நவம்பர் 1ம் தேதி ஆர்டர் கொடுத்த பொருள் பார்சலில் வந்திருக்கிறது.
அந்த பார்சலில் பாஸ்போர்ட் கவர் தான் வந்திருந்தது. ஆனால் பாஸ்போர்ட் கவருடன் சேர்த்து நிஜ பாஸ்போர்ட் ஒன்றும் இருந்துள்ளதை பார்த்து பாபு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அமேசானின் வாடிக்கையாளர் சேவை பிரிவினரை தொடர்பு கொண்ட மிதுன் பாபு பாஸ்போர்ட் கவருடன், நிஜ பாஸ்போர்ட் பார்சலில் வந்தது குறித்து தெரியப்படுத்தினார்.ஆனால் வாடிக்கையாளர் சேவை பிரிவினர் கொடுத்த பதில் வேற லெவலில் இருந்துள்ளது.
உங்களுக்கு நேர்ந்தது போல மீண்டும் ஒரு முறை நடக்காது. இது தொடர்பாக விற்பனையாளரிடம் தெரியப்படுத்தி கவனமாக இருக்குமாறு கூறிவிடுவதாக சொல்லிவிட்டு வைத்துள்ளனர். ஆனால் அந்த நிஜ பாஸ்போர்ட்டை என்ன செய்வது என அவர்கள் பொறுப்பான பதிலை கூறவில்லை..
மிதுனுக்கு வந்த நிஜ பாஸ்போர்டில் இருந்த தகவலின்படி, திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சாலிஹ் என்பவருடையது தான் அந்த பாஸ்போர்ட். பாஸ்போர்டில் மொபைல் எண்ணும் இல்லாததால் மிகுந்த சிரமப்பட்டு முகமது சாலிஹை தொடர்பு கொண்டு அவரது பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை தெரியப்படுத்தியிருக்கிறார் மிதுன். விரைவில் அந்த பாஸ்போர்டை முகமதுவிடம் அளிக்கவிருக்கிறார்.
பாஸ்போர்ட் வந்தது எப்படி ?
மிதுனுக்கு வந்த பாஸ்போர்ட் கவரை முதலில், முகமது சாலேஹ் ஆர்டர் செய்து பெற்றிருக்க வேண்டும். அவர் அந்த கவரை சரிபார்ப்பதற்காக தனது பாஸ்போர்டை அதில் பொருத்திப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அந்த கவர் அவருக்கு பிடிக்காததால் பாஸ்போர்டை எடுக்க மறந்து கவருடன் சேர்த்து அமேசானுக்கு ரிடர்ன் செய்திருக்கிறார்.
இந்த கவரை பெற்றுக்கொண்ட அமேசான் விற்பனையாளர் அதனை சரிபார்க்காமலே, மற்றொரு கவருக்கு ஆர்டர் செய்த மிதுன் பாபுவுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும்.
ஆக, இப்படித்தான் கவனக்குறைவாக பொருள் விற்பனை நடந்து கொண்டிருக்கிறதோ என நினைக்கத்தோன்றுகிறது… அமேசான் நிறுவனம் தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் விற்பனையாளர்கள் கவனக்குறைவுடன் செயல்படுவதை கண்டறிந்து சரிசெய்யாவிட்டால் அதன் மதிப்பை இழக்க நேரிடும் என வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.