தொழிலதிபர் வீட்டில் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ரூ.2 கோடியை கொள்ளையடித்த வீட்டு வேலைக்காரர்கள்…
தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம், நகைகளை கொள்ளையடித்த வீட்டு வேலைக்காரர்கள் உட்பட ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியின் பஸ்சிம் விஹார் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஹர்மீத் அரோரா, இவருக்கு வயது 46. இவர் அருகாமையில் உள்ள முந்த்கா தொழிற்பேட்டையில் டோட் ஃபிட்டிங் செய்து தரும் தொழில் நிறுவனம் ஒன்றை தனது மனைவி ஹர்மீத் கவுர் உடன் சேர்ந்து நடத்தி வருகிறார்.
ஹர்மீத் அரோராவின் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதாக கடந்த செவ்வாயன்று மாலை 6 மணியளவில் போலீசாருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்தது. இதன் பேரில் அங்கு சென்று பார்த்த போது தொழிலதிபரையும் அவரின் மகனையும் கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 2 கோடி ரூபாய் ரொக்கம், நகைகளை 5 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றதாகவும், வீட்டு வேலைகளை பார்ப்பதற்காக தாங்கள் புதிதாக பணியமர்த்திய இரண்டு பெண்களும், அவர்களின் ஆண் நண்பர்கள் என ஐந்து பேர் சேர்ந்து இந்த கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்தியிருப்பதாகவும் தெரியவந்தது.
இது குறித்து காவல்துறையினர் விசாரித்த போது கொள்ளை சம்பவம் குறித்து மேலும் பல விவரங்கள் வெளியாகின.
ஹர்மீத் அரோரா தனது வீட்டில் வீட்டு வேலை பார்ப்பதற்காக ஏஜென்சி ஒன்றின் மூலம் மீனா, ஹேமா குமாரி என இரண்டு பெண்களை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் பணியமர்த்தியுள்ளனர். இந்த இரண்டு பெண் ஊழியர்களும் அரோராவின் வீட்டின் தரைதளத்தில் உள்ள அறை ஒன்றில் தங்கியிருந்தவாறு வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று மாலை 4 மணியளவில், வீட்டு வேலைக்கார பெண்களுள் ஒருவரின் உதவியுடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் நுழைந்திருக்கிறார். அவர் கையில் ஸ்கிரூ டிரைவரை வைத்துக் கொண்டு அரோராவை மிரட்டி அவரையும், அவருடைய மகனையும் கயிற்றால் கட்டிப் போட்டுள்ளார். அந்த நபருடன் மேலும் இரண்டு பேர் வந்துள்ளனர்.
பின்னர் இவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று பரிசோதித்து வீட்டில் இருந்த ரொக்கம், நகைகளை திருடிச் சென்றுள்ளனர். திருடப்பட்ட ரொக்கம், நகைகளின் மதிப்பு 2 கோடி ரூபாய்க்கும் மேல் என அரோரா தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் வீட்டில் வேலைபார்த்து வந்த இரண்டு பெண்களின், ஆண் நண்பர்கள் தான் கொள்ளையில் ஈடுபட்ட மூவரும் என அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் தலைமறைவாக இருக்கும் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.