வெள்ளத்தில் மிதக்கும் வடசென்னை.. வீட்டை காலி செய்து இடம்பெயரும் மக்கள்
தொடர் மழை காரணமாக வடசென்னை பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னையில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வடசென்னை பகுதிகளான ராயபுரம், திருவொற்றியூர், தண்டயார்பேட்டை, காசிமேடு, கொருக்குபேட்டை, பெரம்பூர், புளியந்தோப்பு வியாசர்பாடி, ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெரம்பூர் கே.எம். கார்டன் அருகே உள்ள 15 தெருக்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. திரு.வி.க.நகர் பகுதியில் மழைநீர் சாலைகளில் குளம் போல் தேங்கியுள்ளன. கொருக்குப்பேட்டை, சிவாஜி நகர், அஜீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் உடைமைகள் முழுவதும் சேதமடைந்துள்ளன.
இந்தப்பகுதியில் பழமையான கட்டடங்கள் உள்ளது. இந்த மழை வெள்ளம் காரணமாக அவை இடிந்துவிழும் நிலையில் உள்ளன. தண்டையார்பேட்டையில் சூழ்ந்துள்ள மழைவெள்ளம் காரணமாக பொதுமக்கள் கழிப்பிடம் செல்லக்கூட வழியில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.
இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த துர்கா தேவி என்ற பெண் கூறுகையில், “மழையின் காரணமாக சனிக்கிழமை மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டது. ஞாயிற்றுகிழமையில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துக்கொண்டது. இங்கு இருப்பவர்களுக்கு சாப்பாட்டுக்கே கஷ்டம். முதல்வர் ஸ்டாலின் வந்து பார்வையிட்டு சென்றார் அவ்வளவுதான் மேற்கொண்டு இந்தப்பகுதியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருடா வருடம் இதேப்பிரச்னை தான் மழை வந்தால் இங்கு தண்ணீர் தேங்கி நின்றுவிடும். யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வருத்தத்தோடு கூறினார்.
வீட்டை காலி செய்யும் குடும்பங்கள்
மழை வெள்ளம் காரணமாக வீட்டில் இருந்த மின்சாதனப் பொருள்கள் எல்லாம் வீணாகிவிட்டதாக அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர். தண்ணீர் வடியாத காரணத்தால் இரவெல்லாம் கட்டிலும், ஸ்டூல்களின் மீதும் குடும்பத்தோடு அமர்ந்திருப்பதாகவும், விடிய விடிய வீட்டில் உள்ள தண்ணீரை அப்புறப்படுத்துவதாகவும் கூறுகின்றனர். உணவு பற்றாக்குறை மற்றும் வீடுகளில் சூழ்ந்த மழை வெள்ளம் காரணமாக தண்ணீரில் மூழ்கிய உடைமைகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.தண்ணீர் வடியாத காரணத்தால் பொதுமக்களே குடங்களில் தண்ணீரை எடுத்து அப்புறப்படுத்து நிலைதான் உள்ளது. சிலர் சொந்த செலவில் மோட்டாரை வாடகைக்கு எடுத்து தண்ணீரை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் விசாரித்தபோது, “ மோட்டார்கள் அனைத்தும் பழுதாகிவிட்டதாகவும் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தனர்.