முகேஷ் அம்பானி வீட்டின் இருப்பிடம் குறித்து விசாரித்த மர்ம நபர்களை தேடும் போலீசார் – மும்பையில் பரபரப்பு
இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபரும், கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானியின் வீடு குறித்து சந்தேகத்துக்கிடமான முறையில் விசாரித்து சென்ற மர்ம நபர்கள் இருவரை மும்பை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
உலக பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவராக திகழ்பவர் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி. இவர் மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் முகேஷ் அம்பானி வசித்து வரும் வீடான ‘ஆந்திலியா’ குறித்து இருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் விசாரித்ததாக வாடகை கார் ஓட்டுனர் ஒருவர் போலீஸ் கண்ட்ரோல் ரூம் எண்ணுக்கு அழைத்து தகவல் கொடுத்தார்.
விவிஐபியாக திகழும் முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் வாடகை கார் ஓட்டுனர் கூறிய தகவலால் மும்பை காவல்துறை பரபரப்படைந்தது. பின்னர் ஆசாத் மைதான் காவல்நிலையத்துக்கு சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரை வரவழைத்து போலீசார் விசாரித்தனர்.
ஆசாத் மைதானம் அருகேயுள்ள கில்லா நீதிமன்றத்தின் வாயிலில், மஞ்சள் நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட சில்வர் கலர் மாருதி வேகன் – ஆர் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த இருவர் ஆந்திலியாவின் (முகேஷ் அம்பானியின் வீடு) இருப்பிடம் குறித்து விசாரித்தனர். அவர்கள் சீட்டின் கீழ் பை ஒன்று இருந்தது. இருவரும் குர்தா, பைஜாமா அணிந்திருந்ததாகவும், இந்தி மற்றும் உருதுவில் பேசியதாகவும் அந்த கார் ஓட்டுனர் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மும்பை நகர காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
கார் ஓட்டுனர் குறிப்பிட்ட வேகன் ஆர் காரின் வாகன பதிவு எண் கொண்ட காரை போலீசார் தேடி வருகின்றனர். அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் காரை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. கில்லா நீதிமன்ற சிக்னலில் அந்த காரை பார்த்ததாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவரும் கூறியுள்ளார்.
கார் ஓட்டுனர் அளித்த தகவல்கள் அடிப்படையில் இருவரின் ஸ்கெட்ச் தயாரிக்கப்பட்டு அதன் உதவியுடன் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆசாத் மைதான் காவல்நிலையத்தில் இருந்து ஆந்திலியாவுக்கு செல்லும் வழி நெடுகிலும் பேரிகேட் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆந்திலியா பாதுகாப்பு வளையத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு மர்ம நபர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மும்பை நகரம் பரபரப்படைந்திருக்கிறது.