இருளர் குடிசைக்கு நடந்து சென்று ஆய்வு செய்தார் அமைச்சர் க.பொன்முடி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மழையால் பாதிக்கப்பட்ட இருளர் குடிசைக்கு நேரில், நடந்தே சென்று ஆய்வு செய்தார் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தப்பேட்டை இருளர் குடிசை பகுதியில் உள்ள காசி மற்றும் சபாபதி ஆகிய இருவரின் குடிசை வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதமானது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில், ஆய்வு மேற்கொண்ட திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி, மெயின் ரோட்டில் இருந்து 300 மீட்டர் தூரம் அமைந்துள்ள இருளர் குடிசைக்கு நடந்தே சென்று ஆய்வு செய்து, வீட்டை இழந்தவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது, சந்தப்பேட்டை ஏரிக்கரை அருகே கூரை வீடுகளில் குடும்பம் நடத்தி வரும் 22 இருளர் குடும்பத்தினருக்கும் உடனடியாக பட்டா வழங்கவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தியாகதுருகம், சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இரவு முழுவதும் விடாமல் பெய்த மழை, விடிந்த பின்னரும் தொடர்ந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.