ஒரே கிராமத்தில் 29 பேருக்கு கொரோனாதொற்று: இளம்பெண் உயிரிழப்பு
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே மூன்று நாட்களில், ஒரே கிராமத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்தப் பகுதியில் கொரோனா பாதிப்பால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். இதனால், கிராமம் முழுக்க சீல் வைக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் ஐந்து நாட்களுக்கு வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த பொகலூர் ஊராட்சியை சேர்ந்தது சொக்கட்டாம்பள்ளி. இங்கு 5 நாட்களுக்கு முன்பு துக்க காரியத்துக்காக, கிராம மக்கள் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சென்று வந்துள்ளனர். வந்தவுடன் இதில் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுகாதாரத் துறை சார்பாக சிறப்பு முகாம் நடத்தி 80 பேருக்கு தொடர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 3 நாட்களுக்கு முன் 4 பேருக்கும். நேற்று முன்தினம் 13 பேருக்கும். நேற்று 12 பேருக்கு என மூன்று நாட்கள் 29 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த தகவல் அறிந்தவுடன், துணை சுகாதார பணிகளில் கூடுதல் இயக்குனர் கோவிந்தராஜ் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பன், டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு அங்கு ஆய்வு செய்தது.
அந்த கிராமத்தில் குமரன் நகர், கணபதிபுதூர், சொக்கட்டாம்பள்ளி, என அந்த கிராமம் முழுக்க சீல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் ஐந்து நாட்களுக்கு நடமாட தடை விதிக்கப்பட்டது. கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர்.
அங்குள்ள அரசு துவக்கப் பள்ளி, நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்ததால் மாணவ, மாணவியர் பள்ளிக்குள் அனுமதிக்கப் படவில்லை. இதையடுத்து ஆசிரியர்கள் மட்டுமே வந்து திரும்பி வருகின்றனர். ஊராட்சி தலைவர் நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா, ஆகியோர் தலைமையில் கிராமம் முழுவதும் தூய்மைப்பணி செய்யப்பட்டது.
தொற்று உறுதியானவர்களில், அதிக பாதிப்பு இல்லாதவர்கள், அறிகுறி உள்ளவர்கள் கோவை கொடிசியாவில் அனுமதிக்கப்பட்டும், பாதிப்பு கூடுதலாக உள்ளவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நேற்றும் தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும், வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டாம் எனவும், பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அன்னூர் ஒன்றியத்தில் ஒரே கிராமத்தில், மூன்று நாட்களில் 29 பேருக்கு தொற்று உறுதியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதே ஊராட்சியில், ஆதிதிராவிடர் காலனியில் 30 வயதான சித்திரா என்கிற பெண், கோவையில் அரசு மருத்துவமனையில் தொற்று பாதிப்பில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி அங்கு இறந்தார். இதையடுத்து அப்பகுதி அந்தப் பெண் வசித்த வீடு இருக்கும் பகுதியிலும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, தூய்மைப்பணி செய்யப்பட்டது.
இளம்பெண் பலியானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கொரோனாவால் இறந்ததால், இறந்த பெண்ணின் உடலை, அரசு மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் தர மறுத்துவிட்டது.