‘சமஷ்டி’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து கூக்குரல் இட்டால் சிறைதான் : மஹிந்த அணி எச்சரிக்கை

சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு என்று வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில் சமஷ்டி என்ற சொல் தென்னிலங்கையை கொதிப்படையச் செய்துள்ளது. சமஷ்டி முறைமையிலான தீர்வைக் கோரும் கூட்டமைப்பினருக்கு எதிரான விமர்சனங்களை ஆளுந்தரப்பினரும், கடும்போக்குவாத பௌத்த தேரர்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்குக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உடனுக்குடன் பதிலடிகளையும் வழங்கி வருகின்றார். அந்தவகையில் ‘தமிழர் உரிமைகளுக்கான எங்கள் குரலை எவராலும் அடக்கவே முடியாது’ என்று மஹிந்த அணிக்கு சம்பந்தன் சாட்டையடி கொடுத்துள்ளார்.

சம் பந்தனின் இந்தக் கருத்து அமைச்சர் விமல் வீரவன்சவை மேலும் சீற்றமடையச் செய்துள்ளது. இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:-

“சமஷ்டி, சமஷ்டி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து கூக்குரல் இட்டால் அவர்களுக்குச் சிறைதான் வாழ்க்கை. அதுதான் அவர்களுக்கான எமது மிகப்பெரிய பரிசாகும். எனவே, கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடும்போதே மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.

சர்வதேசப் பலம் இருக்கின்றது என்ற நப்பாசையில் அரசும் சிங்கள மக்களும் விரும்பாத சமஷ்டி தீர்வைக் கூட்டமைப்பினர் திரும்பத் திரும்பக் கோருவதால் எவ்வித நன்மையையும் அவர்கள் பெற முடியாது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒற்றையாட்சிக்குள் தீர்வுக்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நாட்டு மக்கள் ஆணை வழங்கினார்கள். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் இதற்கான மக்கள் ஆணை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மீண்டும் கிடைக்கும். எனவே, மக்கள் ஆணையை எவரும் மீறவே முடியாது” – என்றார்.

Comments are closed.