சென்னைவாசிகள் கவனத்திற்கு.. சுரங்கப்பாதைகளில் மீண்டும் தேங்கிய தண்ணீர்.. போக்குவரத்து மாற்றம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் நேற்று மாலை முதல் சென்னையில் இடைவெளியில்லாமல் தொடர் மழை பெய்து வருகிறது. நகரின் மையப்பகுதிகளான வடபழனி, கோடம்பாக்கம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், கிண்டி, அடையாறு, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
நேற்று இரவு முதல் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சுரங்கப் பாதைகள் மற்றும் சாலைகளில் மழைநீர் கடல் போல் தேங்கியுள்ளது. வியாசர்பாடி கணேசபுரம்,கொருக்குபேட்டை, கெங்குரெட்டி , மேட்லி, துரைசாமி, உள்ளிட்ட 11 சுரங்கபாதைகள் மூடல். தண்ணீர் அதிகமாக இருப்பதால் பூந்தமல்லி சாலை எழும்பூர் காவல் ஆணையர் அலுவலகம் அருகே போக்குவரத்து நிறுத்தம். அண்ணாநகர் கீழ்ப்பாக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் நேராக செண்ட்ரல் செல்ல முடியாது. சென்னை திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு எண்ணூர் போன்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வடசென்னையில் ராயபுரம், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக எண்ணூரில் 17 செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ மழையும், வில்லிவாக்கத்தில் 12 செ.மீ மழையும், சென்னை தாம்பரத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகி உள்ளதாக வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.