திருமணம் செய்துகொள்வதாக கூறி 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மதப்பிரச்சாரகர் கைது
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா நகரில் தெலுங்கு பாப்பிஸ்ட் சர்ச் உள்ளது. அங்கு அரசு சுகாதார துறையில் லேப் டெக்னீசியன் ஆக பணியாற்றும் வில்லியம்ஸ் மத பிரச்சாரகராக செயல்பட்டு வந்தார். கவர்ச்சிகரமாக மேளம் அடித்து மதப்பிரச்சாரம் செய்யும் வில்லியம்ஸ் இளைஞர்களை தன்பால் ஈர்த்து வைத்திருந்தார். இந்த நிலையில் நலகொண்டாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மத பிரச்சாரகர் வில்லியம்ஸ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உறுதியளித்து என்னுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
மேலும் நான் வைத்திருந்த 20 லட்ச ரூபாயை பறித்துக் கொண்டு தற்போது வேறு ஒரு பெண்ணுடன் அவர் தொடர்பில் இருக்கிறார் என்று நலகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை பிடித்து விசாரிப்பதற்காக வில்லியம்ஸ் வீட்டிற்குச் சென்றனர்.
போலீசார் வீட்டுக்கு வருவதை அறிந்த வில்லியம்ஸ் தனக்கு மார்பு வலி ஏற்பட்டு இருப்பது போல் நாடகமாடி அங்கு உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்ந்துகொண்டார். அவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் வில்லியம்சை தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிய போலீசார் கைது செய்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பல்வேறு விதமான மருத்துவ பரிசோதனைகளை அவருக்கு மேற்கொண்டனர்.
மருத்துவ பரிசோதனையில் அவர் ஆரோக்கியமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் இதுபோன்ற மோசடிகளில் அவர் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. வில்லியம்ஸ் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.