2-வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு தகுதி.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு துபாயில் நடந்த 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது. ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

இதன்படி கேப்டன் பாபர் அசாமும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். ரிஸ்வான் ரன் கணக்கை தொடங்கும் முன்பே வெளியேறி இருக்க வேண்டியது. மேக்ஸ்வெல்லின் பந்துவீச்சில் அவர் தூக்கியடித்த பந்தை வார்னர் ஓடிவந்து பிடிக்க முயற்சித்தார். பந்து சரியாக வார்னரின் கையில் விழுந்த போதிலும் அது சிக்காமல் தெறித்து பவுண்டரிக்கு ஓடியது. இந்த அதிர்ஷ்டத்தை ரிஸ்வான் கச்சிதமாக பயன்படுத்தி கொண்டார்.

அதன் பிறகு சாதுர்யமாக ஆடிய ரிஸ்வான்-அசாம் ஜோடியினர் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டனர். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் சேர்த்து வலுவான அஸ்திவாரம் உருவாக்கினர். நடப்பு தொடரில் ‘பவர்-பிளே’யில் பாகிஸ்தான் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது தான். அணியின் ஸ்கோர் 71 ரன்களை (10 ஓவர்) எட்டிய போது பாபர் அசாம் 39 ரன்களில் (34 பந்து, 5 பவுண்டரி) ஆடம் ஜம்பாவின் சுழலில் வீழ்ந்தார்.

அடுத்த வந்த பஹார் ஜமானும் நிலைத்து நின்று ஆடியதால் பாகிஸ்தானின் ரன்வேகம் அதிகரித்தது. ஹேசில்வுட்டின் ஒரு ஓவரில் ரிஸ்வான் 2 சிக்சர், ஒரு பவுண்டரி நொறுக்கினார். இந்த உலக கோப்பையில் 3-வது முறையாக அரைசதத்தை அடித்து அசத்திய ரிஸ்வான் தனது பங்குக்கு 67 ரன்கள் (52 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். ரிஸ்வான் வெளியேறிய பிறகு கடைசி கட்டத்தில் ரன்வேட்டையை துரிதப்படுத்தும் வேலையை பஹார் ஜமான் கவனித்துக் கொண்டார். ஸ்டார்க்கின் ஓவரில் இரு பிரமாதமான சிக்சர்களை பறக்க விட்டு திகைப்பூட்டினார். இதற்கிடையே ஆசிப் அலி ரன்ஏதுமின்றியும், சோயிப் மாலிக் ஒரு ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 176 ரன்கள் சேர்த்தது. பஹார் ஜமான் 55 ரன்களுடனும் (32 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), முகமது ஹபீஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 177 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ஆரோன் பிஞ்ச் (0) ஷகீன் ஷா அப்ரிடி வீசிய ஆக்ரோஷமான பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதைத் தொடர்ந்து டேவிட் வார்னரும், மிட்செல் மார்சும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். பவர்-பிளேயில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் திரட்டியது. வேகமாக ரன் சேர்த்த அதே வேளையில் விக்கெட்டுகளையும் சீரான இடைவெளியில் இழந்தனர்.

மிட்செல் மார்ஷ் 28 ரன்களிலும் (3 பவுண்டரி, ஒரு சிக்சர்), அடுத்து வந்த ஸ்டீவன் சுமித் 5 ரன்னிலும், கிளைன் மேக்ஸ்வெல் 7 ரன்னிலும் ஷதப் கானின் சுழல் வலையில் சிக்கி நடையை கட்டினர். இதற்கு மத்தியில் போராடிக் கொண்டிருந்த டேவிட் வார்னர் (49 ரன், 30 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) தவறான அவுட்டுக்கு இரையானார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 96 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

இந்த சூழலில் மார்கஸ் ஸ்டோனிசும், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டும் கூட்டணி போட்டு அணியை நிமிர வைத்தனர். கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான 19-வது ஓவரை வீசிய ஷகீன் ஷா அப்ரிடியின் பந்து வீச்சில் மேத்யூ வேட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹசன் அலி கோட்டை விட்டார். இது தான் பாகிஸ்தானுக்கு பாதகமாக மாறியது. அந்த ஓவரில் மேத்யூ வேட் ஹாட்ரிக் சிக்சர் விரட்டியதோடு வெற்றிக்கனியையும் பறித்தார்.

ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த உலக கோப்பையில் ஒரு அணி விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச இலக்கு இது தான். ஸ்டோனிஸ் 40 ரன்களுடனும் (31 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), மேத்யூ வேட் 41 ரன்களுடனும் (17 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தனர். சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கான் 4 விக்கெட்டுகள் சாய்த்தும் பலன் இல்லை.

இந்த உலக கோப்பையில் தோல்வியே சந்திக்காமல் இருந்த பாகிஸ்தானின் வீறுநடை முடிவுக்கு வந்தது. அத்துடன் 20 ஓவர் கிரிக்கெட்டில் அமீரக மண்ணில் தொடர்ச்சியாக 16 ஆட்டங்களில் வெற்றிகண்டிருந்த பாகிஸ்தானின் அந்த சாதனை பயணத்துக்கும் ஆஸ்திரேலியா முற்றுப்புள்ளி வைத்தது.

துபாயில் நாளை மறுதினம் நடக்கும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் யார் வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு இது முதலாவது 20 ஓவர் உலக கோப்பையாக இருக்கும்.

பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் 29 வயதான முகமது ரிஸ்வான் இந்த ஆண்டில் 23 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 10 அரைசதம் உள்பட 1,033 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓராண்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்த ஆண்டில் 23 ஆட்டங்களில் 826 ரன்கள் எடுத்து இந்த சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார்.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடிக் கொண்டிருந்த டேவிட் வார்னர் (49 ரன்) ஷதப்கான் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்ட போது பந்து பேட்டில் உரசியது போல் சென்றது. அதை பிடித்த விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் அவுட் கேட்டு அப்பீல் செய்தார். நடுவரும் விரலை உயர்த்தினார். இதனால் வார்னர் வெளியேறினார். ஆனால் ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. பிறகு ஏன் வார்னர் டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்யவில்லை என்பது தான் ரசிகர்களின் ஒரே கேள்வி.

Leave A Reply

Your email address will not be published.