வடகிழக்கு பருவமழை பாதிப்பு – சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று தொடக்கம்
தொடர் மழை காரணமாக டெங்கு, மலேரியா நோய்கள் பரவுவதை தடுக்கும் விதமாக சென்னையில் சிறப்பு மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த அதி கனமழையால், மாநகராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீ சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தெருக்களில் தேங்கிய மழை நீரில் அதிகளவு கொசு உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் சூழல் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
ஆழ்வார்பேட்டையில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த சிறப்பு மருத்துவ முகாம் மூலம் பொதுமக்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்க மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்படுவதோடு,பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.