அரிமா கழகத்தினால் கொவிட்_19 முகக்கவசங்கள், தொற்று நீக்கும் திரவப் பொதி வழங்கி வைப்பு.
கல்லொழுவை அல் – அமானுக்கு 2,000 முகக்கவசங்கள், 5 லீற்றர் தொற்று நீக்கும் திரவப் பொதி அரிமா கழகத்தினால் அன்பளிப்பு.
கொவிட் தொற்று காரணமாக, பல மாதங்களாக வித்தியாலயங்களில் தடைப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வித்தியாலய மாணவர்களின் நன்மை கருதி, மினுவாங்கொடை கல்வி வலயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வித்தியாலயங்களுக்கு, மினுவாங்கொடை அரிமா கழகத்தின் மூலம் முகக் கவசங்கள் அடங்கிய தொகுதிகளும், தொற்று நீக்கும் திரவப் பொதிகளும் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கமைவாக, மாணவர்களின் சுகாதார நடைமுறைகளைக் கட்டியெழுப்பும் நோக்கில், கல்லொழுவை, அல் – அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கும், அரிமா கழகத்தின் மூலம் 2,000 முகக்கவசங்கள் அடங்கிய தொகுதி மற்றும் ஐந்து லீற்றர் கொண்ட கைகளைச் சுத்தப்படுத்திக் கழுவிக் கொள்ளும் தொற்று நீக்கும் திரவப் பொதி என்பன, அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் தலைமையில், வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, அரிமா கழகத்தின் தலைவர் லயன் திலுத் ரணதுங்க தலைமையிலான குழுவினர், இவற்றை அதிபர் மற்றும் ஆசிரியர் குழாமிடம் கையளித்தனர்.
இச்சிறப்பு நிகழ்வின்போது, பிரதி அதிபர் எம்.எம்.எம். ரிம்ஸான் உள்ளிட்ட உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அரிமா கழகத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இந்த தொற்று நீக்கிப் பொருட்களை வித்தியாலய அதிபர் பெற்றுக் கொண்டதுடன், இந்நிகழ்வின் இறுதியில் அதிபர் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
மினுவாங்கொடை கல்வி வலயத்திற்குட்பட்ட சிங்கள மொழி மூலமான நான்கு வித்தியாலயங்களுக்கும், ஒரேயொரு முஸ்லிம் வித்தியாலயமான அல் – அமானுக்கும், குறித்த தொற்று நீக்கும் பொருட்கள் அரிமா கழகத்தினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.